×

100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பலாத்காரம்; பாஜக கூட்டணி எம்பி கட்சியில் இருந்து சஸ்பெண்ட்: பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க அச்சம்

பெங்களூரு: கடந்த ஐந்தாண்டுகளாக பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி வந்தாலும் குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டியதால், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட இரு பெண்கள் சிறப்பு விசாரணை படை அதிகாரிகளிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். மேலும் அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் தற்போது கர்நாடகம் மட்டுமில்லாமல், தேசியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் வீடியோ காட்சிகள் உள்ள பென்டிரைவ் வெளியாகி இருப்பது புகாரை மேலும் வலுவடைய செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிரான எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது.

25 அதிகாரிகள் நியமனம்:
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார புகாரை விசாரணை நடத்தும் பொறுப்பு கர்நாடக சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி பி.கே.சிங் தலைமையில் இரு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் வழிகாட்டுதலில் போலீஸ் டிஎஸ்பி பிரபாவதி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த புகார் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தற்போது நியமனம் செய்துள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு துணையாக மூன்று பெண் டிஎஸ்பிகள், நான்கு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட கூடுதலாக 25 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்கு மூலம்:
இதனிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களிடம் கடந்த இரண்டு நாட்களாக டிஎஸ்பி பிரபாவதி விசாரணை நடத்தி வருகிறார். இதில் இரு பெண்கள் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வந்ததாகவும், இந்த கொடுமையை எதிர்த்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சித்தபோது, போலீசில் புகார் கொடுத்தால், ஒட்டு மொத்த குடும்பத்தை கொலை செய்து அழித்து விடுவேன் என்று மிரட்டியதாலும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவும் சமூகத்திற்கு பயந்து, இந்த கொடுமையை அனுபவித்து வந்ததாக கண்ணீர் மல்க வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களை விசாரிப்பதில் சிக்கல்:
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் காம லீலைகள் தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் கொண்ட பென்டிரைவ் கிடைத்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 100க்கும் மேற்பட்டுள்ள பெண்களையும் எப்படி அழைத்து விசாரணை நடத்த முடியும். அப்படி அழைத்தாலும் அனைவரும் வாக்கு மூலம் கொடுக்க ஒப்புக்கொள்வார்களா? அவர்களை பலவந்தப்படுத்தி அழைத்து வாக்கு மூலம் பெற முடியுமா? இவ்வளவு சிக்கல் இருக்கும் பட்சத்தில் எப்படி விசாரணை நடத்துவது என்ற குழப்பத்தில் சிறப்பு விசாரணை படையினர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டத்தின் மூலம் பிரஜ்வலை அழைத்து வர முடிவு ?
இந்நிலையில் பாலியல் புகார் வெளியாகியதை தொடர்ந்து வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள பிரஜ்வல் வேரண்ணாவிடம் வாக்கு மூலம் பெற வேண்டியது சிறப்பு விசாரணை படைக்கு அவசியமாக உள்ளது. அவர் இல்லாமல் இருப்பதால், அவர்கள் குடும்பத்தினர் மூலம் பிரஜ்வலை தொடர்ப்பு கொண்டு வாக்கு மூலம் பெறலாமா? வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் விவரம் பெற முடியுமா என்று யோசித்து வருவதாகவும் இது முடியாத பட்சத்தில் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை அழைத்து வர சட்டத்தின் மூலம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக சிஐடி போலீஸ் வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

கட்சியில் இருந்து நீக்கம்:
இதனிடையில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி இருக்கும் பிரஜ்வலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மஜவை சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதைத் தொடர்ந்து இன்று மஜத மாநில செயற்குழு கூட்டம் குமாரசாமி தலைமையில் நடந்தது. அதில், பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. பிரஜ்வலை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமான பெண்கள் அமைப்பினரும், காங்கிரசாரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவரே உதவி கேட்டு வரும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால், அவரை கைது செய்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பலாத்காரம்; பாஜக கூட்டணி எம்பி கட்சியில் இருந்து சஸ்பெண்ட்: பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க அச்சம் appeared first on Dinakaran.

Tags : BJP coalition ,Bangalore ,Special Investigation Force ,Prajwal Revanna ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு...